திருத்தல வரலாறு
திருமால் தவம் செய்த இடம் எனும் பொருளில் திருமால் தவம் பாக்கம் எனப்பெற்று, தற்போது திருமாதலம்பாக்கம் எனப் பெயர் மருவி அழைக்கப்படுகிறது. திருமாலால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருமாலீஸ்வரர் எனப் போற்றப்படும் இறைவன், அன்னை திரிபுரசுந்தரி சமேதராய், அருளே வடிவாகக் காட்சி தருகிறார். திருமாலுக்கு சூரியகோடி பிரகாசத்தோடு இத்தலத்தில் திருக்காட்சி தந்தமையால் இறைவன் இன்றளவும் பொன்னிறமாக திருக்காட்சி தந்து நம்மையெல்லாம் வசீகரிக்கிறார். மாதவனே மனமொன்றித் தவம் செய்த இடமாகையால் சஞ்சலங்கள் போக்கி மன அமைதியை நல்கும் தலம். நாராயணனும், நமசிவாயமும் ஒருங்கே காட்சி தரும் ஹரிஹர க்ஷேத்திரம். திருமாலின் உறைவிடம் திருமகளுக்கும் இருப்பிடம் ஆவதால், திருமகளின் அருளையும் மழையென பொழிவிக்கும் திருத்தலம்.
சிவாலயம்
சோழர்காலத்து கட்டுமானமாய் ஈராயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தோடு புண்ணிய பூமி காஞ்சிக்கு மிக அருகில் விளங்கும் இந்த சிவாலயம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1996 ல் முதல் குட முழுக்கு கண்டநிலையில், தற்போது ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.